கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி: முதல் பரிசு ரூ.50,000 - தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!

 
குறும்படப் போட்டி

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும், அது குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்திலும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குவது மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவது போன்றவற்றுக்காகத் தமிழ்நாடு காவல்துறையால் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இக்குறும்படப் போட்டி நடத்தப்படுகிறது.

மாணவர்கள் சமர்ப்பிக்கும் குறும்படங்கள் கீழ்க்கண்ட மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்:

பெண்களின் பாதுகாப்பில் ஆண்களின் பங்கு, குற்றச் சம்பவங்களைத் தடுப்பதில் பார்வையாளரின் தலையீடு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் சமூகத்தின் பங்கு.

விதிகள் மற்றும் நிபந்தனைகள்: குறும்படங்கள் தமிழில் இருக்க வேண்டும். படத்தின் கால அளவு 2 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் தனிநபராகவோ அல்லது அதிகபட்சம் 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் தங்களது படைப்புடன் கல்வி நிறுவனத்தின் உறுதிப்படுத்தும் சான்றிதழையும் இணைக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணைப்புப் படிவத்தில் (https://bit.ly/SSF-ShortFilmCompetition) படைப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

படைப்புகளை அனுப்பக் கடைசி தேதி: 10.10.2026.

பரிசுத் தொகைகள்: முதல் பரிசு: ரூ.50,000/- இரண்டாம் பரிசு: ரூ.25,000/- மூன்றாம் பரிசு: ரூ.15,000/-

மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் இந்தப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது ஆக்கப்பூர்வமான படைப்புகள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக் காவல்துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.