தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு... முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த வைகோ!

 
வைகோ வைகோ

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்துப் பேசினார். முன்னதாக நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்திருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் இந்த உயர்மட்டச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

முதலமைச்சருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தங்களது கலந்துரையாடலின் முக்கிய விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். "கேடு விளைவிக்கும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக, அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மதிமுகவும், தூத்துக்குடி பகுதி மக்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம். தற்பொழுது வேதாந்தா குழுமம் வேறு வடிவத்தில் தாமிர உற்பத்தி ஆலையைத் தொடங்கத் தமிழக அரசை அணுகி அனுமதி பெற முயற்சிப்பதாகத் தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நலனைக் காக்கும் பொருட்டு, இந்த ஆலைக்கு எந்த வடிவிலும் மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்பதை முதலமைச்சரிடம் நான் மிகத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளேன்."

மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் தவெக அரசின் கொள்கை முடிவுகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதாக வைகோ குறிப்பிட்டார்.

இச்சந்திப்பு முற்றிலும் மரியாதை நிமித்தமானது என்று இருதரப்பிலும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டாலும், அண்மைக்காலமாகத் தவெக அரசுக்கு ஆதரவாக மதிமுக தலைவர்கள் பேசி வரும் கருத்துக்கள் மற்றும் இந்தத் தொடர் சந்திப்புகள், தமிழக அரசியல் களத்தில் தவெக – மதிமுக இடையேயான ஒரு புதிய கூட்டணிக்கான முக்கிய முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.