ரூ.50,000-க்கு மேல் இருந்தால் ஆவணம் கட்டாயம் - தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமல்!

 
சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள் சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் முழுவீச்சில் அமலுக்கு வந்துள்ளன. இனி ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு நகர்வும் தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருக்கும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று மாலை தேர்தல் அட்டவணையை வெளியிட்டது முதல், தமிழக அரசு இயந்திரம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்

1. பொதுமக்களுக்கான பணப் பரிமாற்ற விதிகள்:

சாமானிய மக்கள் மற்றும் வியாபாரிகள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விதிமுறை இது. ரூபாய் 50,000 வரம்பு: எவ்வித ஆவணமும் இன்றி ஒருவர் அதிகபட்சமாக ₹50,000 வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல முடியும். ₹50,000-க்கு மேல் ரொக்கம் வைத்திருந்தால், அதற்கான முறையான ஆதாரங்கள் (வங்கிப் பணமெடுத்த ரசீது, வியாபார ரசீது போன்றவை) கையில் இருக்க வேண்டும். அதிக அளவிலான பட்டுப்புடவைகள், நகைகள், பாத்திரங்கள் அல்லது வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கூடிய பரிசுப் பொருட்களை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், அவை 'பறக்கும் படைகளால்' (Flying Squads) பறிமுதல் செய்யப்படும்.

2. அரசியல் கட்சிகள் மற்றும் அமைச்சர்களுக்கான தடைகள்:

அரசு சார்பில் எவ்விதப் புதிய திட்டங்களையோ, சலுகைகளையோ அல்லது மானியங்களையோ அறிவிக்க முடியாது. அமைச்சர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசு வாகனங்கள், விமானம் அல்லது அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தக் கூடாது.

எந்தவொரு அரசுத் துறையிலும் புதிய பணி நியமனங்கள் அல்லது அதிகாரிகளின் இடமாற்றங்களைச் செய்யக் கூடாது. (அவசரத் தேவைக்கு ஆணையத்தின் அனுமதி கட்டாயம்).

தேர்தல்

3. பிரச்சாரக் கட்டுப்பாடுகள்:

கோயில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட இடங்களை எக்காரணம் கொண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.

வாக்காளர்களைக் கவரச் சாதி அல்லது மத ரீதியான தூண்டுதல் பேச்சுகளில் ஈடுபடக் கூடாது.

வாக்குப்பதிவு (ஏப்ரல் 23) தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே அனைத்து விதமான பிரச்சாரங்களும் முடிக்கப்பட வேண்டும்.