தமிழ்நாடு ப்ரீமியர்... 'சென்னை தமிழ் டைட்டன்ஸ்' அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்!
தமிழ்நாடு பிரீமியர் பிக்கிள் பால் லீக் தொடரின் இரண்டாவது சீசனை முன்னிட்டு, 'சென்னை தமிழ் டைட்டன்ஸ்' அணியின் புதிய ஜெர்சி சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் பேட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி. சிந்து மற்றும் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு புதிய ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தனர். மேலும், பிரபல நடிகர் சரத்குமார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
தமிழ் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர்களான நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் 'நோவா லைஃப் ஸ்பேசஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்து நிகழ்வை வழிநடத்தினர்.
விழாவில் பேசிய பி.வி. சிந்து இந்தியாவில் பிக்கிள் பால் விளையாட்டின் அசுர வளர்ச்சியைப் பாராட்டினார். ஜோஷ்னா சின்னப்பா இது போன்ற தொடர்கள் புதிய திறமையாளர்களை உருவாக்கச் சிறந்த தளம் என்றார். நடிகர் சரத்குமார் விளையாட்டுக்கு மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் உண்டு எனக் குறிப்பிட்டார். வீரர்களின் துடிப்பான ஆற்றலையும் உறுதியான இலக்கையும் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தோற்றத்துடன், சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணி இந்த இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்போடு தயாராகி வருகிறது.
