ஜூலை 31 முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்!

 
சிக்கன் கோழி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31-ம் தேதி முதல் கறிக்கோழி (பிராய்லர்) விற்பனையை முழுமையாக நிறுத்தப்போவதாகத் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகப் பண்ணையாளர்கள் அவற்றிக்கு அதிகளவில் தீவனம் வழங்குகின்றனர். இதனால் கோழிகளின் எடை செயற்கையாக அதிகரிக்கிறது. கோழிகள் விற்பனைக்கு வரும் நேரத்திற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்துகின்றனர். இறுதி நேரத்தில் உணவளிப்பது எடையை உயர்த்துவது மட்டுமின்றி, பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயத்தையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

சிக்கன் கோழி  கறி

இந்த தீவனம் வழங்கும் நடைமுறையைத் தடுக்கக் கட்டாய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு சட்டமாக்க வேண்டும் என்றும், கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

வள்ளலார் நினைவு தினம், மகாவீரர் ஜெயந்தி போன்ற நாட்களில் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறைச்சி கோழி சிக்கன் கறிக்கோழி

வரும் ஜூலை 31-ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்குக் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்பட உள்ளதால், பொதுமக்கள் மற்றும் உணவகங்களுக்குக் கோழி இறைச்சி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.