தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்டோபர் 12) நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மழை?
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். அப்போது இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (அக்டோபர் 13) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
