🌧️ சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!🌧️
தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, செப்.24 அதிகாலை கலிங்கப்பட்டினத்திற்கு அருகே கரையை கடந்தது. இதன் தாக்கம் மற்றும் நிலவும் வானிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
செப்.25-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரியிலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.வரும் செப்.26-ம் தேதியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. செப்.27 முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
