தமிழகத்தில் மீண்டும் மழை🌧️ 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு... வெதர்மேன் அலெர்ட்!

 
பிரதீப் ஜான்

 

 

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெயிலுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று வட உள் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், இன்றும் உள் மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வெதர்மேன்

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் நீண்ட நாட்களாக வெயிலின் தாக்கத்தை எதிர்கொண்ட மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது.இன்றும் இந்த மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதுடன், சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தேனி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

சில இடங்களில் உருவாகும் சக்திவாய்ந்த இடிமேகக் கூட்டங்களால் மிக கனமழையும் பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வளிமண்டல உறுதியற்ற தன்மை காரணமாக மெதுவாக நகரும் தீவிர இடிமேகங்கள் உருவாகி வருவதாக பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

வெதர்மேன்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இன்றைய மழையின் முக்கிய மையமாக உள் தமிழக மாவட்டங்களே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் உள் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், குறிப்பாக இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.