தமிழகத்தில் புதிய வரலாற்று சாதனை – ஒரே நாளில் மின் நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டாகப் பதிவு!

 
மின் நிர்மல்குமார்

தமிழக மின்சார வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் ஒட்டுமொத்த மாநிலத்தின் மின் நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டுகளைக் (4,754.5 லட்சம் யூனிட்) கடந்து புதிய உச்சத்தைத் தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பொதுவாகக் கோடைக் காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் மின் நுகர்வு உச்சத்தைத் தொடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக மின் தேவை கோடைக் காலப் பதிவுகளையே முறியடித்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாகத் தமிழகத்தின் மின் நுகர்வு முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய உச்சங்களை எட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஜூலை மாதத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக மின் தேவை குறையும். ஆனால் இந்த ஆண்டு மின் நுகர்வு இந்த அளவுக்கு உயர முக்கியக் காரணங்களாகப் பின்வருபவை சுட்டிக்காட்டப்படுகின்றன.

தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும், எல் நினோ காலநிலை தாக்கத்தாலும் பல மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகமாக நீடித்து வருகிறது. உஷ்ணம் அதிகமாக இருப்பதால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதிகளுக்கான மின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னணி உற்பத்தி மற்றும் தொழில்துறைகளின் தொடர் செயல்பாடுகளும் இந்த அசுர மின் தேவைக்கு மற்றொரு முக்கியக் காரணமாகும். இதற்கு முன்னதாகக் கடந்த ஏப்ரல் 29 அன்று கோடைக்கால மின் நுகர்வு அதிகபட்சமாக 471.45 மில்லியன் யூனிட்டாகப் பதிவாகியிருந்தது. தற்போது ஜூலை மாதத்தில் அது 475.45 மில்லியன் யூனிட்டாக உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதேபோல், மாநிலத்தின் அதிகபட்ச மின் தேவையும்  வரலாற்றிலேயே முதன்முறையாக 21,724 மெகாவாட் என்ற எல்லையைத் தொட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத இந்த இமாலய மின் தேவையைத் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் எவ்வித தடையுமின்றி மிகவும் சீராகப் பூர்த்தி செய்து அசத்தியுள்ளது. மாநிலத்தின் சொந்த நீர்மின் உற்பத்தி, வெப்ப மின் நிலையங்கள் மற்றும் வெளிச் சந்தை கொள்முதல் ஆகியவற்றைத் தாண்டி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இந்த முறை மின் வாரியத்திற்குப் பெருமளவில் கைகொடுத்துள்ளது.

மின்

தமிழ்நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சாதகமான சூழலால், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மட்டுமே தினசரி சராசரியாக 150 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வரலாற்றிலேயே முதன்முறையாக, நடப்புப் பருவத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாகக் காற்றாலை மின் உற்பத்தி மட்டுமே தினசரி 100 மில்லியன் யூனிட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், வரும் நாட்களில் இந்த அதீத மின் நுகர்வு மற்றும் உஷ்ணம் கணிசமாகக் குறையும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.