மருத்துவமனைக்கு செல்பவர்களே கவனம்! 😷 முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

 
மாஸ்க்

 

தமிழகத்தில் சுவாசத் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் டெங்கு காய்ச்சல், கொரோனா, சின்னம்மை, கூகைக்கட்டு அம்மை உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய் பாதிப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஸ்க்ரப் டைபஸ் மற்றும் டெங்கு பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க்

இதற்கிடையே, சில தொற்று நோய்கள் சுவாசம் வழியாகவும் பரவக்கூடிய நிலையில், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பலரும் முகக்கவசம் அணிவதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் சுவாசத் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், பாதிப்புகள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் அலட்சியம் காட்டாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

182 பேருக்கு கொரோனா ... அறிகுறி இருக்கிறவங்க மாஸ்க் போடுங்க...  சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

அதேநேரத்தில், மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தொற்று பரவலை குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல், இருமல் அல்லது பிற அறிகுறிகள் இருப்பவர்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதுடன், காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.