தமிழகத்தில் 1.2 கோடி மரங்கள் நடும் திட்டம் - சென்னையில் சபாநாயகர் துவக்கி வைத்தார்!
சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் 'மண் காப்போம் - காவேரி கூக்குரல்' இயக்கம் சார்பில் நடப்பு நிதியாண்டில் (2026-27) தமிழகம் முழுவதும் 1.2 கோடி மரங்கள் நடும் பிரம்மாண்ட திட்டம் சென்னையில் அதிரடியாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த திட்டத்தின் தொடக்க விழாவில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு இந்த மெகா பசுமைப் பணியைத் முறைப்படி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில், பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர் (முதலமைச்சர் விஜய்யின் தாயார்) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வாழ்த்தினார். இந்த விழாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஈஷா அறக்கட்டளையின் 'மண் காப்போம் - காவேரி கூக்குரல்' இயக்கம் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் விவசாய நிலங்களில் மரங்கள் நடும் பணி கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 1.34 கோடி மரங்கள் வெற்றிகரமாக நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், மண்ணின் வளம் மீட்டெடுக்கப்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் மிக முக்கிய வெற்றியாக, தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 2.6 லட்சம் விவசாயிகள் தங்களது பாரம்பரிய விவசாய முறையிலிருந்து லாபகரமான 'மரம் சார்ந்த விவசாய' முறைக்கு மாறியுள்ளனர்.
தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை போன்ற மதிப்புமிக்க மரங்களை விவசாய நிலங்களின் வரப்புகளிலும், இடைவெளிகளிலும் நடுதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் மற்றும் நிலையான வருமானம் கிடைக்க இந்த இயக்கம் வழிவகை செய்துள்ளது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான புதிய திட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே ஆண்டில் 1.2 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "சுற்றுச்சூழலைக் காப்பதிலும், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் மரம் சார்ந்த விவசாயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் இந்த 1.2 கோடி மரங்கள் நடும் இலக்குக்குத் தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்ட நல்வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பாராட்டினார். இந்த புதிய இலக்கு தமிழகத்தின் பசுமைப் பரப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
