தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை... புதுக்கோட்டை மாணவர்கள் உற்சாகம்!
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 6ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதைக் கருத்தில் கொண்டு, அன்று ஒருநாள் மட்டும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6ம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து புதுக்கோட்டை மாவட்ட மாணவர்களுக்குத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஏப்ரல் 4ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையில் விடுமுறையாக அமைந்துள்ளது.

அதே சமயம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பள்ளித் தேர்வுகள் அல்லது அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனும் இருந்தால், அவை எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஏப்ரல் 18-ஆம் தேதி (சனிக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.
