தமிழகத்தில் 3 நாட்களுக்குத் தொடர் விடுமுறை.. குஷியில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்!

 
விடுமுறை

இன்று ஆகஸ்ட் 14 முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு இந்த 3 மாவட்டங்களில் தொடர் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளன. ஆடிப்பூரம் திருவிழா, ஆண்டாள் திருத்தேர் திருவிழா, பரலோக மாதா விண்ணேற்பு திருவிழா என விருதுநகர், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ஆகஸ்ட் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலின் புகழ்பெற்ற ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு இன்று 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ஆடிப்பூரம் கஜேந்திர வரதர் திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஆடிப்பூரப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 

பனிமய மாதா

இன்று ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறையைத் தொடர்ந்து, நாளை  ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம் - அரசு பொது விடுமுறை) மற்றும் ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை எனத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.