தமிழகத்தில் ஜூன் 4-ல் தொடக்கப் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகள் குறித்துப் பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி திறக்கப்படும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கம் போல் கோடை விடுமுறைக்குப் பிறகு, 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் (2026-2027) 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தப் புதிய பாடநூல்களைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதால், ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய பாடத்திட்டம் குறித்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கான இந்த மூன்று நாள் பயிற்சி முகாம் காரணமாகவே, 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
