தமிழகத்தில் நவ.12-ல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம் - என்னென்ன ஆவணங்கள் தேவை.. முழு லிஸ்ட்!
தமிழ்நாட்டில் 2027-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.
நவம்பர் 2: வாக்குச் சாவடிகளைத் திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகள் நிறைவு. நவம்பர் 12: ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. டிசம்பர் 11: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கக் கடைசி நாள். டிசம்பர் 28: பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை மற்றும் முடிவுகள் அறிவிப்பு. ஜனவரி 4, 2027 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.
அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலோ அல்லது சிறப்பு முகாம் நாட்களிலோ பொதுமக்கள் உரிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மேலும், [https://voterportal.eci.gov.in](https://voterportal.eci.gov.in) மற்றும் 'ECINET' ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

18 வயது பூர்த்தியடைபவர்கள் (ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 தேதிகளில் தகுதிபெறுவோர்) மற்றும் பெயர் விடுபட்டவர்கள் படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம்.
முகவரிச் சான்று: மின்சாரம், நீர் அல்லது எரிவாயு பில் (குறைந்தது 1 ஆண்டு), வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட், நில உரிமைப் பதிவுகள், பதிவு செய்யப்பட்ட வாடகை அல்லது விற்பனைப் பத்திரம் ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்.
வயதுச் சான்று: பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், 10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (பிறந்த தேதி உள்ளவை) அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் சுய சான்றொப்பமிட்ட நகலை இணைக்க வேண்டும்.

வெளிவாழ் இந்தியர்கள்: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் படிவம் 6ஏ மூலமாக நேரில் அல்லது தபால் வழியில் விண்ணப்பிக்கலாம்.
இடமாற்றம் மற்றும் திருத்தங்கள்: முகவரி மாற்றம், விவரத் திருத்தம் அல்லது புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போனால் படிவம் 8-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வாக்குச்சாவடி நிலை முகவர்களை முறையாக நியமிக்கக் கட்சிகள் ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
