பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம் - மத்திய அரசின் அறிக்கையில் சாதனை விபரம்!

 
சக்ஸஸ் உற்சாகம் மாணவி மாணவிகள் பள்ளி வகுப்பறை தேர்வு

மத்திய அரசின் 'கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு' வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மிகக் குறைவான இடைநிற்றல், தகுதியான ஆசிரியர் இருப்பு மற்றும் உள்கட்டமைப்பு என ஏறக்குறைய அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடப் பல மடங்கு சிறந்து விளங்குவது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.

கல்விக்கான வாய்ப்பை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உறுதி செய்வதோடு, மாணவர்கள் தங்களது கல்வியைத் தடையின்றித் தொடரப் பலதரப்பட்ட மற்றும் உயர்தரமான வழிகளை வழங்கும் முன்னோடி கல்விச் சூழல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்தப் பள்ளிகளில் 3.9 சதவீத பள்ளிகள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் பள்ளி செல்லும் குழந்தைகளில் 5 சதவீதத்தினருக்குத் தமிழ்நாட்டிலேயே கல்வி வழங்கப்பட்டு வருவது மத்திய அரசின் அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பள்ளி மற்றும் ஆசிரியர்களின் பலம் குறித்த புள்ளிவிவரங்கள் தேசிய அளவை விடச் சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக மொத்தம் உள்ள 57,566 பள்ளிகளில், 1,24,02,872 (1.24 கோடி) மாணவர்களும், 5,69,909 (5.69 லட்சம்) ஆசிரியர்கள் உள்ளனர். தேசிய அளவில் மாணவர்-ஆசிரியர் விகிதம் 24 ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த விகிதம் 22 ஆக மிகச் சிறப்பாக உள்ளது.

தேசிய அளவில் ஒரு பள்ளிக்குச் சராசரியாக 169 மாணவர்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் சராசரியாக 215 மாணவர்களும், 10 ஆசிரியர்களும் உள்ளனர். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் மிக நீண்ட காலத்திற்குத் தங்களது கல்வியைத் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி கற்போரின் எண்ணிக்கையைப் பள்ளிகளில் தக்கவைப்பதில் தமிழ்நாடு தேசிய சராசரியை விடப் பெருமளவு முந்தியுள்ளது. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 92 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 89 சதவீதத்தை விட அதிகமாகும். உயர் தொடக்கக் கல்வியில் தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம் 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் தேசிய சராசரி 90 சதவீதம் மட்டுமே ஆகும்.

இடைநிலைக் கல்வி சேர்க்கை: இடைநிலைக் கல்வியில் மாநிலத்தின் சேர்க்கை விகிதம் 97 சதவீதத்தை எட்டியுள்ளது. இது தேசிய சராசரியான 82 சதவீதத்தை விடப் பல மடங்கு கூடுதலாகும்.

மேல்நிலைக் கல்வியைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம் 85 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 62 சதவீதத்தோடு ஒப்பிடும் போது மிகப்பெரிய உயர்வாகும்.

தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைகளில் பள்ளி இடைநிற்றல் விகிதம் 0% (பூஜ்ஜியம்) ஆகப் பதிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அதே சமயம், இடைநிலைக் கல்வியில் (9 மற்றும் 10-ஆம் வகுப்பு) இடைநிற்றல் விகிதம் வெறும் 6.2 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது 9.5 சதவீதம் என்ற தேசிய சராசரியை விடக் கணிசமாகக் குறைவாகும்.

மத்திய அரசின் இந்தத் தரவுகள், கல்வித் துறையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய பிரம்மாண்ட கல்வி உள்கட்டமைப்புகள் மற்றும் பள்ளி வளாகப் பகுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசரக் காலங்களில் பள்ளிக் கல்விச் சட்ட விதிகளை முறைப்படுத்தவும் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து அந்தந்தப் பகுதி போலீசார் மற்றும் குழந்தைகள் நலப் பாதுகாப்புப் பிரிவினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.