தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த முதல் பருவ ஆங்கிலத் தேர்வு வினாத்தாள் கசிவு - தலைமையாசிரியர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

 
பள்ளி வகுப்பறை

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த 1 மற்றும் 2ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான முதல் பருவத் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்ததை அடுத்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அவசர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை ஆங்கிலப் பாடத்துக்கான முதல் பருவத் தேர்வு நடைபெறவிருந்தது. ஆனால், தேர்வு தொடங்குவதற்கு முன்பே 1 மற்றும் 2ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாட வினாத்தாள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு நாளை நடைபெறவிருந்த ஆங்கிலத் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பள்ளி மாணவர்கள்

ரத்து செய்யப்பட்ட தேர்வுக்குப் பதிலாக மாணவர்களுக்கு வழங்குவதற்காகப் புதிய வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பாதுகாப்பாகப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

புதிதாக வழங்கப்படவுள்ள வினாத்தாள்களைப் பயன்படுத்தி திட்டமிட்டபடி நாளை தேர்வு தடையின்றி நடைபெறும் என்றும், இதுகுறித்துத் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.