தமிழகத்தின் ராஜா சுப்ரமணி முப்படைகளின் தலைமைத் தளபதியாகத் பொறுப்பேற்பு - தமிழர்களுக்கு பெருமை!

 
முப்படைகளின் தளபதி  ராஜா சுப்ரமணி முப்படைகளின் தளபதி  ராஜா சுப்ரமணி

இந்தியாவின் ஒட்டுமொத்தப் ராணுவப் பாதுகாப்பை வழிநடத்தும் மிக உயர்ந்த பதவியான முப்படைகளின் தலைமைத் தளபதி பொறுப்பிற்குத் தமிழகத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தில் மிக உயரிய மற்றும் சவாலான பொறுப்புகளைத் திறம்பட வகித்த அனுபவம் கொண்டவர் ராஜா சுப்ரமணி. ஒட்டுமொத்த இந்திய ராணுவ வரலாற்றிலும், முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் இந்த உச்சகட்டப் பதவிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்:

இவர் இந்திய ராணுவத்தின் துணைக் தளபதியாக பணியாற்றியவர். அதற்கு முன்பாக, நாட்டின் மிக முக்கியமான வடக்கு பிராந்திய ராணுவப் பிரிவின் கமாண்டராகப் பொறுப்பு வகித்து, எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர்.

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் அச்சுறுத்தல்களைக் கையாளுவதில் இவருக்கு இருக்கும் நீண்டகால உத்திசார்ந்த ராணுவ அனுபவம், அசைக்க முடியாத தலைமைத்துவத் திறன் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு இவரை முப்படைகளின் தலைமைத் தளபதியாகத் தேர்வு செய்துள்ளது.

முப்படைகளின் தலைமைத் தளபதியாக ராஜா சுப்ரமணி பொறுப்பேற்றுள்ளதற்குத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாகத் தமிழகத்தைச் சேர்ந்த மாவீரர் ராஜா சுப்ரமணி பொறுப்பேற்றிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். இது அவரது அர்ப்பணிப்பிற்குத் தேசம் வழங்கிய உன்னத அங்கீகாரம். அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பும், ராணுவ பலமும் மேலும் பன்மடங்கு வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை" என்று பாராட்டியுள்ளார்.