தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு - 33 கோடி யூனிட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி!
தமிழகத்தில் நிலவிய தீவிரக் காற்றின் வேகம் காரணமாகக் காற்றாலைகள் வாயிலாகக் கிடைக்கும் மின் உற்பத்தியின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
பொதுவாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசனாகக் கருதப்பட்டாலும், மாநிலத்தில் ஏப்ரல் மாதத்திலேயே காற்றாலை மின்சாரம் கிடைக்கத் தொடங்கிவிடுகிறது.

இந்த சீசனில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததன் காரணமாக, காற்றாலை மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 8 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 1,044.67 கோடி யூனிட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த 1,011.20 கோடி யூனிட் மின் உற்பத்தியை விட 33 கோடி யூனிட் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் நாட்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தியின் அளவும் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
