ஆசிய அரங்கில் சாதனை படைத்த தமிழ்ப்பெண்... அரசின் கவனம் எங்கே? - வேல்முருகன் ஆவேசம்!

 
மோட்டார் பந்தயம் ரேஸ் ஜகதீஸ்ரீ குமரேசன்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் பந்தயப் போட்டியில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இளம் வீராங்கனை ஜகதீஸ்ரீ குமரேசனுக்குத் தமிழக அரசு உரிய அங்கீகாரமும் தொடர் ஆதரவும் வழங்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். 

தாய்லாந்தில் நடைபெற்ற 'FIM Asia Women’s Cup of Circuit Racing' மோட்டார் பந்தயத்தின் 4வது சுற்றில் இந்தியாவின் சார்பில் சென்னை வீராங்கனை ஜகதீஸ்ரீ குமரேசன் பங்கேற்றார். முதல் பந்தயத்தில் 3வது இடத்தையும், இரண்டாவது பந்தயத்தில் 4வது இடத்தையும் பிடித்த அவர், ஒட்டுமொத்தமாக 3வது இடத்தைப் பெற்று ஆசிய அளவில் வெற்றி மேடையேறி சாதனை படைத்துள்ளார்.

வேல்முருகன்

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தி.வேல்முருகன், சர்வதேச அளவில் சாதிக்கும் இளம் வீராங்கனைகளை அடையாளம் கண்டு பாராட்டி ஊக்கமளிப்பது அவசியமானது என்றார். பிரபல விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் போன்று, ஆசிய அளவில் பதக்கம் வென்றுள்ள ஜகதீஸ்ரீ குமரேசனுக்கும் முறையான அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

மோட்டார் பந்தயம் போன்ற சவாலான சர்வதேசத் துறைகளில் சாதிக்கும் இளம் பெண் வீராங்கனைகளுக்குத் தேவையான தீவிரப் பயிற்சி, நிதியுதவி, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் தொடர் ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆசியப் போட்டியிலும் தமிழ்நாட்டின் பெயரை உயர்த்திவரும் திறமையான இளம் சாதனையாளர்களின் எதிர்கால சர்வதேசப் பயணத்திற்குத் தமிழக அரசு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.