வாழ்வின் கடைசி துளி வரை தமிழ்ப்பணி... 7000க்கும் மேற்பட்ட மேடைகள்... உலகம் முழுவதும் எதிரொலித்த குரல்... பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா வாழ்க்கையும் சாதனைகளும்!
உலகம் முழுவதும் எதிரொலித்த அன்பு பெரியோர்களே குரல்... வாழ்வின் கடைசி நிமிடம் வரையிலும் தமிழ்ப்பணி... குடும்பத்தோடு அமர்ந்து கேட்டு ரசிக்கும் விரசமில்லாத மரியாதையான பேச்சு, என்று சாலமன் பாப்பையா தமிழ் இலக்கிய உலகிலும், பட்டிமன்றங்களிலும், இந்த சமூகத்தின் மீதும், அடுத்த தலைமுறை மீதும் கொண்டிருந்த காதல் தனி முத்திரை பதித்த மாபெரும் தமிழறிஞர் மற்றும் பேச்சாளர் ஆவார்.

பிப்ரவரி 22, 1936 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து பல மாணவர்களை உருவாக்கினார்.
தனது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடுவராக இருந்து வெற்றிகரமாக நடத்தியுள்ளார். குடும்பங்களிலும் சமூகத்திலும் நடக்கும் எளிய நிகழ்வுகளை நகைச்சுவையோடும் ஆழமான சிந்தனையோடும் பேசி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
புறநானூறு மற்றும் அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களுக்கு எளிய முறையில் புதிய வரிசைப்படி உரை எழுதி வெளியிட்டுள்ளார். மு. வரதராசனின் இலக்கிய அணுகுமுறையைத் தழுவி, ரசனை மற்றும் ஆய்வு நோக்கைக் கொண்டு தமிழ்ப் பணியைத் தொடர்ந்தார். தமிழ் இலக்கியம் மற்றும் சேவைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
