பாஜக பட்டியலில் தமிழிசை பெயர் நீக்கம்.. தமிழிசையை சுற்றிவரும் சர்ச்சைகள்!

 
தமிழிசை தமிழிசை

2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் முன்னாள் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் பெயர் விடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், புதுச்சேரியுடன் நீண்டகாலத் தொடர்புடைய தமிழிசையின் பெயர் நீக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழிசை

தமிழிசை புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பதவி வகித்த காலத்தில் எழுந்த சில புகார்கள் தற்போதைய நீக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதில் தமிழிசைக்குத் தொடர்பிருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தனது சொந்த மற்றும் குடும்பச் செலவுகளுக்காகப் பயன்படுத்தியதாக எழுந்த புகார்கள் மக்கள் மத்தியில் எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

ஒருவேளை தமிழிசை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி இந்த ஊழல் புகார்களைக் கையில் எடுத்துப் பிரசாரம் செய்யும் என பாஜக மேலிடம் அஞ்சுகிறது.

தனி விமானம் மூலம் `ரெம்டெசிவிர்’ மருந்தை கொண்டு வந்த தமிழிசை !

தமிழிசையின் பிரசாரம் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸின் வெற்றி வாய்ப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவரைத் தற்காலிகமாகத் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கலாம்.

மத்திய அமைச்சர்கள் எல். முருகன், தேசிய அளவிலான தலைவர்கள், தமிழக பாஜக பிரதிநிதிகளாக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இளம் தலைவர்கள் புதுச்சேரியில் பிரசாரம் செய்ய உள்ளனர்.