"கேட்கவே கூசும் கொச்சையான வார்த்தைகள்" - உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம்!
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் அரசியல் நாகரிகமற்றவை என்றும், கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார் என்றும் பாஜகா மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடுமையாகக் சாடியுள்ளார்.
"தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் பெரும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கின்றன. காவிரியாற்றில் விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ, தமிழ்நாட்டின் உரிமை மீட்கப்படவில்லை என்றோ அக்கறை கொள்ளாமல், முதலமைச்சை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் மோசமான உள்ளர்த்தம் கொண்ட கொச்சையான வார்த்தைகளை உதயநிதி பேசியுள்ளார்."
"கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் கண்டிக்கத்தக்க வகையில் இந்த பேச்சு அமைந்திருக்கிறது. எவ்வளவு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் விமர்சிக்கும் போது சிந்தனையில் ஒரு தூய்மை இருக்க வேண்டும். சிந்தனை இவ்வளவு அழுக்காக இருப்பது திமுகவிற்கே நல்லது அல்ல."
"அவர்கள் தங்களது பேச்சின் தரத்தை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயமில்லை. மக்கள் எப்போதும் பேச்சு நாகரிகத்தையும் அரசியல் நாகரிகத்தையுமே விரும்புவார்கள். மற்றவர்களைத் தரக்குறைவாக விமர்சித்து விட்டுச் சிறையில் இருப்பதையும், ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை செல்வதையும் பெருமையாக நினைத்துக் கொள்பவர்களிடம் அரசியல் கண்ணியத்தை எதிர்பார்க்க முடியாது" என்றும் தமிழிசை தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
