தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிர்ச்சி... சூட்கேசில் மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சூட்கேசில் இருந்து மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரயிலின் பொதுப் பெட்டியின் கடைசிப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வைக்கப்பட்டிருந்த அந்த சூட்கேசில் இருந்து இரத்தம் கசிந்திருப்பதுடன் துர்நாற்றமும் வீசியுள்ளது. இதைக் கண்ட குவாலியர் ரயில்வே அதிகாரிகள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து ரயில் ஆக்ராவில் நிறுத்தப்பட்டுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரயில் ஆக்ரா கன்டோன்மென்ட் நிலையத்தை அடைந்ததும் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து அந்தப் பெட்டியைச் சோதனையிட்டுச் சூட்கேசைக் கைப்பற்றினர். அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே மனித உடல் உறுப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாகப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உடல் உறுப்புகள் சென்னை முத்திரையுடன் கூடிய காகிதத்தில் சுற்றப்பட்டிருந்ததால் இது தொடர்பாக விசாரணை நடத்தத் தனிப்படை சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரயில் நின்ற முக்கிய நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த சூட்கேசை ரயிலில் வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ரயிலில் கண்டெடுக்கப்பட்ட மனித உடல் உறுப்புகள் யாருடையது மற்றும் கொலையாளிகள் யார் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்
