மதிய உணவுக்கு வீட்டிற்குச் செல்லக் கூடாது... அரசு ஊழியர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!
புதுச்சேரி அரசு ஊழியர்கள் மதிய உணவு உண்பதற்காகத் தங்களது சொந்த வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையை புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அனைத்துத் துறைத் லைவர்களுக்கும் இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் தங்களது மதிய உணவை அலுவலகத்திற்கே கொண்டு வந்து சாப்பிடுவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தேவையற்ற அரசு வாகனப் பயன்பாடுகளை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்கள், கல்விச் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்களின் வழக்கமான பயணங்களுக்குப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அரசுத் துறைகளுக்கு இடையேயான கூட்டங்களைக் காணொலி வாயிலாக நடத்த முன்னுரிமை அளிக்கப்படும்.
அலுவலகங்களில் மின்சாரத்தைச் சேமிக்கும் வகையில் பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் விளக்குகள், கணினிகள் மற்றும் குளிரூட்டும் சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய வழிகாட்டுதல்களை அனைத்துத் தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகளைத் துறைத் தலைவர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
