"வாக்களிக்கப் பறந்து வரும் தமிழர்கள்!" - ஐக்கிய அரபு, சவுதி நாடுகளிலிருந்து தமிழகம் குவியும் என்.ஆர்.ஐ-க்கள்!

 
எமிரேட்ஸ் எமிரேட்ஸ்

தமிழக சட்டமன்றத் தேர்தல் திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழர்கள் ஆர்வத்துடன் தமிழகம் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் பக்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் தமிழர்கள், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் விமான டிக்கெட் முன்பதிவு செய்து சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

விமானம்

இது குறித்து பக்ரைன் நாட்டுத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "எங்கள் மண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் எங்களுக்கும் பங்கு உண்டு. அதனால், ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்களிப்பதற்காகவே விடுமுறை எடுத்துக்கொண்டு தமிழகம் செல்கிறோம். வெறும் ஓட்டுப் போடுவதுடன் மட்டுமல்லாமல், சொந்த ஊரில் 10 நாட்கள் தங்கி இருந்து, மே மாதம் 4-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளையும் நேரடியாகப் பார்த்துவிட்டே மீண்டும் வேலைக்குத் திரும்புவோம்" என்று உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடைசி நேரப் பயணங்கள் என்பதால் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருந்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஏர் இந்தியா விமானம்

பலர் இந்த விடுமுறையைத் தேர்தல் பணிகளுக்காகவும், குடும்பத்தினருடன் கோடை விடுமுறையைக் கழிக்கவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

கடல் தாண்டி வேலை பார்த்தாலும், மண்ணின் மீதான பற்று குறையாமல் வாக்களிக்க வரும் இவர்களின் செயல் பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. "நாங்கள் வந்து விட்டோம்... நீங்கள் தயார்தானா?" என வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழக வாக்காளர்களுக்குக் குரல் கொடுத்து வருகின்றனர்.