"டெக் துறையில் இருக்கும் தமிழர்கள் அரசியலுக்கு வர வேண்டும்!" - அண்ணாமலை முழக்கம்!

 
அண்ணாமலை அண்ணாமலை

கட்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்துப் பேசிய அண்ணாமலை, "தொழில்நுட்பத் துறையில் உள்ள உலகளாவிய தமிழ் அறிவாளிகளும் திறமையாளர்களும் தற்பொழுது தமிழக அரசியலிலும் சமூக மாற்றப் பணிகளிலும் தீவிரமாகப் பங்கெடுக்க முன்வர வேண்டும்" என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழர்கள் பெற்றுள்ள முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி பேசிய அண்ணாமலை, முன்னணி நிறுவனங்களில் தமிழர்கள்: "இன்று சாம்சங், இன்டெல் போன்ற உலகின் மிக பிரம்மாண்டமான முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில், தங்களின் அசாத்திய திறமையால் பல தமிழர்கள் மிக முக்கிய உயர் பொறுப்புகளில் அமர்ந்து வழிநடத்தி வருகிறார்கள். இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், குறிப்பாகத் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமையாகும்."

"அத்தகைய உலகத்தரம் வாய்ந்த தமிழர்களின் அறிவு, பன்னாட்டு அனுபவம் மற்றும் புதிய உலகிற்கான நிர்வாகத் திறமைகள் தற்பொழுது தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், சிதைந்து கிடக்கும் தமிழக அரசியலைச் சீரமைப்பதற்கும் அவசரமாகப் பயன்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்" என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

டெக் துறையினர் தங்களின் தற்போதைய பணிகளைப் பாதிக்காத வகையிலும், தங்களின் பங்களிப்பை வழங்க புதிய இயக்கம் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் தமிழக அரசியலில் தங்களின் பங்களிப்பை வழங்குவதற்கும், கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் நமது 'இது நம்ம இயக்கம்' ஒரு வலுவான பாலமாகவும், அவர்களுக்குப் பெரும் உறுதுணையாகவும் இருக்கும்" என அண்ணாமலை திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார்.