மாணவன் தமிழ்ச்செல்வன் மரணம்! நீதி கேட்டு போராடியவர்கள் கைது!
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி DYFI, SFI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த செப்டம்பர் 6-ம் தேதி விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவர், மறுநாள் அப்பகுதியில் உள்ள குட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய போராட்டக்காரர்கள், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும், விசாரணையை விரைந்து நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.மாணவரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிபிசிஐடி விசாரணை கோரி போராட்டக்காரர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
