டேங்கர் லாரி - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

 
விபத்து

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே டேங்கர் லாரியும் காரும் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில், காரில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டாரத்திற்குட்பட்ட விஜயமங்கலம் சாலையில் இன்று மாலை இந்தச் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.  விஜயமங்கலம் சாலையில் காக்காபாளையம் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே அதிவேகமாக வந்த டேங்கர் லாரியின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

மோதிய வேகத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து டேங்கர் லாரியின் அடியில் சிக்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் அருகில் இருந்த பொதுமக்களும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

காரில் பலத்த காயங்களுடன் உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த ஒருவரை மீட்டு உடனடியாக அவசரச் சிகிச்சைக்காகப் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த 6 பேரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கார் விபத்து

விபத்து நடந்த விஜயமங்கலம் - காக்காபாளையம் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி சட்டம்-ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, டேங்கர் லாரி ஓட்டுநரின் அலட்சியப் போக்கால் விபத்து நேர்ந்ததா அல்லது காரின் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.