டாஸ்மாக் பார் டெண்டர் 6 வாரங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு? அமைச்சர் விக்னேஷ் அவசர ஆலோசனை!

 
டாஸ்மாக்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களுக்கான டெண்டர் கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், அதனை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களுக்கான முந்தைய டெண்டர் கால அவகாசம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முழுமையாக நிறைவடைந்தது. புதிய டெண்டர் விடுவதில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, தற்போதைய நிலையைத் தொடர்வது குறித்து அமைச்சர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார். 

டாஸ்மாக்

பார்களைத் தங்குதடையின்றி நடத்துவதற்கும், அரசின் வருவாய் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் ஏதுவாகத் தற்பொழுதுள்ள பார்களின் டெண்டர் கால அவகாசத்தை மேலும் 6 வாரங்கள் வரை நீட்டிக்கலாமா என்பது குறித்து அமைச்சர் விக்னேஷ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

பார்களுக்கான உரிமங்களை நீட்டிக்காமல் திடீரென மூடினால், அதனுடன் இணைந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் முழுமையாக மூட வைப்போம் எனப் பார் உரிமையாளர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கும் கட்டிடங்களின் வாடகை மற்றும் இதரப் பராமரிப்புச் செலவுகள் குறித்த சில முக்கிய விபரங்களும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

டாஸ்மாக்

தமிழக அரசு சராசரியாக ஒரு டாஸ்மாக் கடைக்கு மாத வாடகையாக ரூ. 15,000 வரை வழங்கி வருகிறது. ஆனால், நகர்ப்புறங்களில் உள்ள சில கடைகளுக்கு மாத வாடகை ரூ. 50,000 வரை வசூலிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், அரசு வழங்கும் தொகைக்கு மேல் உள்ள கூடுதல் வாடகைத் தொகையை அந்தந்த பார் உரிமையாளர்களே தங்களது சொந்தப் பொறுப்பில் வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த வாடகை கொண்ட கட்டிடங்களில் இயங்கும் கடைகளுக்கான தொகையை மட்டுமே அரசு முழுமையாக வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, பெரும்பாலான டாஸ்மாக் கடைகளுக்கான மாதாந்திர மின்சாரக் கட்டணத்தையும் (Electricity Bill) கூட பார் உரிமையாளர்களே செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

வாடகை மற்றும் மின்சாரக் கட்டணப் பாரத்தைச் சுமந்து வரும் தங்களுக்குத் தற்போதைய டெண்டர் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என்ற உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு இந்த 6 வாரக் கால நீட்டிப்பு முடிவை நோக்கி நகர்ந்து வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.