டாஸ்மாக் முறைகேடு வழக்கு - செந்தில் பாலாஜியைக் கைது செய்யத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

 
செந்தில்பாலாஜி செந்தில்

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி, அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது. இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரிச் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கை விசாரிக்கவிருந்த நீதிபதி வி. மோகனா விசாரணையிலிருந்து விலகினார். இதன்பின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்சி ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு மனுவை அவசரமாக விசாரித்தது. விசாரணையின் முடிவில், செந்தில் பாலாஜியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை உடனடியாகப் புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் புலனாய்வு விசாரணைக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கின் சாட்சிகளையோ அல்லது ஆதாரங்களையோ கலைக்க எந்த முயற்சியும் செய்யக் கூடாது.

முன்ஜாமீன் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியைக் கைது செய்யத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தற்காலிகத் தடையை ஏற்படுத்தியுள்ளது.