டாஸ்மாக் முறைகேடு... தலைமறைவான ரத்தீஷ் குடும்பத்தினர் நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவரான ரத்தீஷ் தலைமறைவாக உள்ள நிலையில், விசாரணைக்காக அவரது குடும்பத்தினர் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், பார் உரிமம் வழங்குதல் மற்றும் ஊழியர் பணியிட மாற்றம் ஆகியவற்றில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியாகவும், உதயநிதியின் நண்பராகவும் அறியப்படும் ரத்தீஷ், மதுபான வகைகளுக்கு அனுமதி பெறுவது மற்றும் பார் டெண்டர் விவகாரங்களில் அதிகார மையமாகச் செயல்பட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாகக் கடந்த 2025-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ரத்தீஷ் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியானது.

ரத்தீஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதால், வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிப்பதற்காக அவரது குடும்பத்தினர் நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.
