பள்ளி மாணவர்களின் தொடர் போராட்டம் - ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கிராமத்தில், மதுக்கடைக்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடத்திய தீவிரப் போராட்டத்தின் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படுவதாகத் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.டர் போராட்டமும் மாணவர்களின் பங்களிப்பும்
கோடாலி கிராமத்தின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் டாஸ்மாக் கடையினால் சட்டம்-ஒழுங்குப் பாதிப்புகளும், பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகளும் ஏற்பட்டு வந்தன. இக்கடையை அகற்றக் கோரிப் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று பள்ளி மாணவர்கள் தங்களது சீருடையுடன் களத்தில் இறங்கித் தீவிரமாகப் போராடினர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருந்த போதே, அதைப் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம்போல் கடையைத் திறக்க முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் சிலர் மதுக்கடையின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மாணவர்களையும் பொதுமக்களையும் தடுக்க முயன்றபோது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரசுக்கு எதிராகவும், மதுக்கடைக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி பொதுமக்கள் அணைக்கரை - ஜெயங்கொண்டம் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கி, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைக் உணர்ந்த வருவாய்த் துறை மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், "டாஸ்மாக் கடையை உடனடியாக, நிரந்தரமாக மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை" என்பதில் பொதுமக்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தனர். பொதுமக்களின் உணர்வுகளுக்கும், மாணவர்களின் போராட்டத்திற்கும் மதிப்பளித்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர், கோடாலி கிராமத்தில் உள்ள அந்த டாஸ்மாக் கடை இனி நிரந்தரமாக மூடப்படும் எனப் பொதுமக்களின் முன்னிலையிலேயே முறைப்படி அறிவித்தார். இந்த வெற்றிகரமான அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.
