தமிழகம் முழுவதும் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறந்தநாளைக் குறிக்கும் 'மகாவீர் ஜெயந்தி' விழா வரும் மார்ச் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு அன்றைய தினத்தை அரசுப் பொது விடுமுறையாக ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி, மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை) அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள், எப்.எல்.2 (FL2) உரிமம் கொண்ட கிளப்புகள், எப்.எல்.3 (FL3) உரிமம் கொண்ட ஹோட்டல் பார்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபான விற்பனையகங்கள் என அனைத்தும் அன்று முழுவதும் செயல்படாது.
விதியை மீறி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பறக்கும் படைகள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் மற்றும் பிற விசேஷங்கள் காரணமாக வரும் ஏப்ரல் மாதத்திலும் சில நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. மார்ச் 31 ம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறை அறிவிப்பைப் போன்றே வரும் ஏப்ரல் 3ம் தேதி (வெள்ளி) புனித வெள்ளி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஏப்ரல் 14ம் தேதி (செவ்வாய்) தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 21, 22, 23 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் மற்றும் அதற்கு முந்தைய இரு தினங்கள் (வாக்குப்பதிவு ஏப்ரல் 23) என தொடர்ந்து மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
