ஆக.4 முதல் டாஸ்மாக் கடைகள் அடைப்பு? ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
சேலத்தில் நடைபெற்ற ஐந்து மண்டல (சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை) நிர்வாகிகளின் மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் பாரதி, வேலைநிறுத்தத்திற்கான காரணங்களை விளக்கினார்.

தமிழக அரசு 2,500-க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகளைத் தனியாருக்குத் தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடைகள் அல்லது பார்கள் தனியாருக்கு கைமாறும் பட்சத்தில், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்குத் மாற்றுப் பணிகளை அரசு வழங்க வேண்டும். தினமும் அரசுக்குக் கணிசமான வருவாயைப் ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்ட் 4 முதல் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மற்றும் சேலம் ஆகிய ஐந்து மண்டலங்களிலும் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்களின் இந்த வேலைநிறுத்த அறிவிப்பு காரணமாக ஆகஸ்ட் 4 முதல் மதுபானக் கடைகள் அடைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதால், மதுப்பிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
