இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல் - நேற்றே குவிந்த ‘குடி’மகன்கள்!

 
 டாஸ்மாக்  டாஸ்மாக்

தமிழகத்தில் ஜனநாயகத் திருவிழாவான சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுக்கூடங்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்றே மதுபிரியர்கள் அதிகளவில் வாங்கி ஸ்டாக் வைக்கத் தொடங்கினர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு மது விநியோகம் செய்வதைத் தடுக்கவும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே மது விற்பனை நிறுத்தப்பட வேண்டும்.

டாஸ்மாக்

இந்த விதியின் அடிப்படையில் ஏப்ரல் 21: மாலை 6 மணி முதல் கடைகள் மூடப்படும். நாளை ஏப்ரல் 22: முழு நாள் விடுமுறை. ஏப்ரல் 23: தேர்தல் நாள் என்பதால் முழு நாள் விடுமுறை. இந்த மூன்று நாட்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், எலைட் டாஸ்மாக் மற்றும் கிளப்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் இயங்காது எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மதுப்பிரியர்கள் தங்கள் இருப்புக்காக முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். நேற்று காலை முதலே தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

டாஸ்மாக்

தலைநகர் சென்னையில், குறிப்பாக அண்ணா சாலை, கோயம்பேடு மற்றும் தி.நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் முண்டியடித்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.  தொடர் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, சிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை அதிக விலைக்குக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அனுமதியின்றி அதிகப்படியான மதுபாட்டில்களைக் கடத்திச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க எல்லைகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது தெரிந்தால் பொதுமக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.