நடுரோட்டில் கவிழ்ந்த 'டாஸ்மாக்' லாரி.. முண்டியடித்து மது பாட்டில்களை அள்ளிச் சென்ற குடிமகன்கள்.. வைரலாகும் வீடியோ!

 
சரக்கு மது ;பீர் லாரி சரக்கு மது ;பீர் லாரி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில், அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, போட்டி போட்டுக்கொண்டு மது பாட்டில்களை அள்ளிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு, அரசு மதுபானக் கிடங்கில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சரக்கு வாகனம், சாலையின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி கவிழ்ந்த வேகத்தில், அதில் பாக்ஸ் பாக்ஸாக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் சாலை முழுவதும் சிதறி ஓடி உடைந்து நொறுங்கின. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு உதவ ஓடி வருகிறார்கள் என்று நினைத்தால், அங்கு நடந்ததே வேறு!

சாலை முழுவதும் விலை உயர்ந்த மது பாட்டில்கள் சிதறி உடையும் சத்தம் கேட்டதும், சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 'குடிமகன்கள்' மற்றும் பொதுமக்கள் அங்குப் படையெடுக்கத் தொடங்கினர். கையில் கிடைத்த சாக்குப்பை, பாலிதின் கவர் மற்றும் ஹெல்மெட்களைக் கொண்டு, சாலையில் உடையாமல் தப்பிய நல்ல மது பாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். சிலர் தங்களின் சட்டைகளுக்குள்ளும், பேன்ட் பாக்கெட்டுகளுக்குள்ளும் பாட்டில்களை அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். போலீசாருக்குத் தகவல் தெரிந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், சாலையில் இருந்த முக்கால்வாசி 'சரக்கு' பாட்டில்களை மக்கள் காலி செய்திருந்தனர்.

சரக்கு மது ;பீர் லாரி

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தூர் போலீசார், அங்குப் பாட்டில்களைத் திருடிக் கொண்டிருந்த கூட்டத்தைக் கலைத்துவிட்டு, கவிழ்ந்த லாரியை மீட்டுப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்தும், மது பாட்டில்களைத் திருடிச் சென்ற நபர்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மனிதநேயத்தை மறந்து மது பாட்டில்களை அள்ளிய இந்தச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.