அறிவித்த படி 717 மதுக்கடைகள் மூடல்...டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

 
tasmac tasmac

 

தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மாநில வாணிபக் கழகத்தின் கீழ் மொத்தம் இயங்கி வரும் 4,765 கடைகளில், பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் இடங்களை ஆய்வு செய்யுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த ஆய்வின் முடிவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் நூற்றுக்கணக்கான கடைகள் விதிமுறைகளை மீறிச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

tasmac

பொதுமக்களின் நலனையும் மாணவர்களின் பாதுகாப்பையும் மட்டுமே பிரதானமாகக் கொண்டு, வழிபாட்டுத் தலங்களின் அருகே இருந்த 276 கடைகளும், பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் அமைந்திருந்த 186 கடைகளும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. இவற்றுடன் பயணிகள் தினசரி வந்து செல்லும் பேருந்து நிலையங்களின் பகுதிகளில் இயங்கி வந்த 255 கடைகளும் இந்த அதிரடிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, இரண்டு வார காலக்கெடுவிற்குள் மொத்தமாக 717 கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.

tasmac

முதல்வரின் இந்த மக்கள் நலன் சார்ந்த உத்தரவை அடுத்து, குறிப்பிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இருந்த மதுக்கடைகளும் ஒவ்வொன்றாக அடையாளம் காணப்பட்டு தற்பொழுது முழுமையாக மூடப்பட்டுவிட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கோவில்கள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே நீண்ட நாட்களாகப் பொதுமக்களுக்குத் தொல்லையாக இருந்த இந்தக் கடைகள் தற்பொழுது நிரந்தரமாக மூடப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.