'5 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் கோடிக்கும் மேல் வரி' - அம்பானி பேச்சு!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) குழுமத்தின் 49-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (ஏஜிஎம்) இன்று மதியம் 2 மணிக்கு மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சாதனை நிதிநிலை முடிவுகள், நாட்டின் கருவூலத்திற்கு வழங்கிய மெகா வரிப் பங்களிப்பு மற்றும் எதிர்கால செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
ரிலையன்ஸ் குழுமம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதை உறுதிப்படுத்தும் வகையில் முகேஷ் அம்பானி பகிர்ந்த புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2025-2026 ஆம் நிதியாண்டில் மட்டும் பல்வேறு வரிகள் மற்றும் சுங்கக் கடமைகள் (டாக்ஸ் மற்றும் டியூட்டீஸ்) மூலம் இந்திய அரசுக்குக் கூட்டுத்தொகையாக ரூ.2,16,472 கோடியைச் செலுத்தி, நாட்டின் அதிக வரி செலுத்தும் தனிப்பெரும் கார்ப்பரேட் நிறுவனமாக ரிலையன்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கருவூலத்திற்குச் செலுத்தியுள்ள ஒட்டுமொத்த வரிப் பங்களிப்புச் ரூ.9.78 லட்சம் கோடியைத் (சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) தாண்டியுள்ளது.
"கடந்த ஐந்து ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு உள்கட்டமைப்பு விரிவாக்கங்களுக்காகச் சுமார் ரூ.6,48,428 கோடி மூலதன முதலீட்டைச் (கேபெக்ஸ்) செய்துள்ளது. இந்தியாவின் முதல் 50 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்த ஒட்டுமொத்த முதலீட்டு மதிப்பில், மூன்றில் ஒரு பங்கு முதலீட்டை ரிலையன்ஸ் மட்டுமே தனித்துச் செய்து சாதனை படைத்துள்ளது."
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இந்தியா உலக நாடுகளுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்ற நோக்கில் ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் பிரிவின் கீழ் புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். "இந்தியா என்பது வெளிநாடுகளில் உருவாக்கப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பங்களை வெறும் நுகர்வோராகப் பயன்படுத்தும் நாடாக மட்டும் இருக்கக் கூடாது. நாம் உலகளாவிய ஏ.ஐ. தலைவனாக மாற வேண்டும். ஜியோ மொபைல் டேட்டாவை மிக மலிவாக மாற்றியது போல், 'அனைவருக்கும் ஏ.ஐ., அனைத்து இடங்களிலும் ஏ.ஐ.' என்ற கோட்பாட்டின் கீழ் மிகக் குறைந்த செலவில் தொழில்நுட்பத்தை வழங்க உள்ளோம்."
இதற்காகக் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இந்தியாவின் மிகப்பெரிய இறையாண்மை கொண்ட ஏ.ஐ. உள்கட்டமைப்பு மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. கட்ச் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மரபுசாரா மின்சக்தி மூலம் இயங்கவுள்ள இந்த மெகா தகவல் மையத்தின் (டேட்டா சென்டர்) முதற்கட்ட 120 மெகாவாட் கொள்ளளவு வரும் 2026 டிசம்பருக்குள் செயல்பாட்டிற்கு வரும். இது என்விடியா அதிநவீன அமைப்புகள் மூலம் இயக்கப்படும்.
இம்மாநாட்டின் மிக முக்கிய நிகழ்வாக, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்நிறுவனத்தின் மெகா பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (ஐபிஓ) முதற்கட்ட வரைவு ஆவணங்களை இன்று இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) ரிலையன்ஸ் முறைப்படி சமர்ப்பித்துள்ளது. ஜியோவின் இந்த ஐபிஓ பணிகளை ஈஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் கொண்ட அடுத்த தலைமுறைத் தலைவர்கள் முன்னின்று வழிநடத்துகின்றனர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த வருவாய் நடப்பு ஆண்டில் 9.8% உயர்ந்து ரூ.11,75,919 கோடியாகவும், நிகர லாபம் 17.8% அதிகரித்து ரூ.95,754 கோடியாகவும் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது என்று முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் நிறைவு செய்தார்.
