"ஜிம்முக்குப் போ... பாய் பிரண்ட் இருக்கா?"... டிசிஎஸ் நிறுவனத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை !
நாசிக்கில் உள்ள பிரபல டி.சி.எஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர், சக ஊழியர்களால் தொடர்ந்து பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரில், மேலாளர் மட்டத்தில் இருந்த ஷாருக் குரேஷி மற்றும் ரசா மேமன் ஆகியோர் தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். "உனக்கு பாய் பிரண்ட் இருக்கிறானா?" என்று தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், "நீ மிகவும் ஒல்லியாக இருக்கிறாய், ஜிம்முக்குப் போய் உடம்பைத் தேற்றினால் தான் பார்க்க அழகாக இருப்பாய்" என்று உருவக் கேலி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அலுவலகப் பணி என்ற போர்வையில் அடிக்கடி தனது இருக்கைக்கு அழைத்து இது போன்ற சங்கடமான கேள்விகளைக் கேட்டு அத்துமீறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம் மின்னஞ்சல் மூலம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், இறுதியில் காவல்துறையை அணுகிய பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய நாசிக் போலீசார், தற்போது வரை ஒரு பெண் உட்பட 7 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர், அந்தப் பெண்ணின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும் எப்.ஐ.ஆர் (FIR) பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்களை நிறுவனம் தற்போது பணியிடை நீக்கம் செய்துள்ளது.

ஒரு சர்வதேச நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஜூன் 2025 முதல் தொடர்ந்து இதுபோன்ற தொல்லைகளை அனுபவித்து வந்த நிலையில், மற்ற சில பெண் ஊழியர்களும் இதேபோன்ற புகார்களை தற்போது அளிக்க முன்வந்துள்ளனர். காவல்துறையினர் தற்போது ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து, கடந்த சில ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் நடந்த அத்துமீறல்கள் குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குறிப்பாகப் பெண்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் (POSH) அந்த நிறுவனத்தில் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பெரிய நிறுவனங்களில் நடக்கும் இதுபோன்ற மறைமுகக் குற்றங்கள் குறித்துப் பெண்கள் துணிச்சலாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
