தேசியக் கொடி கம்பம் நட்ட ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி; 3 மாணவர்கள் படுகாயம்!
இன்று நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காகக் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த உடற்கல்வி ஆசிரியர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், சுதந்திர தின விழாவிற்காகத் தேசியக் கொடியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரும்பு கொடிக்கம்பத்தை நடும் பணியில் உடற்கல்வி ஆசிரியர் பிரியபிரெடா பிஹிரா மற்றும் சில மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்புக் கம்பம் அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் கொடிக்கம்பத்தில் பலத்த மின்சாரம் பாய்ந்ததில் ஆசிரியர் பிரியபிரெடா பிஹிரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
ஆசிரியருக்கு உதவியாக இரும்புக் கம்பத்தைப் பிடித்துக்கொண்டிருந்த 3 மாணவர்களும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பாலசோர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அலட்சியப் போக்கு குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
