மாதவிடாய் நேரத்தில் மாணவியை வகுப்பறை வெளியே நிற்க வைத்த ஆசிரியர் இடமாற்றம்!
சென்னை மாநகராட்சிப் பள்ளி ஒன்றில், மாதவிடாய் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த 11 வயது ஆறாம் வகுப்பு மாணவியை, சக மாணவர்களின் முன்னிலையில் அவமானப்படுத்தி 4 மணி நேரம் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகிய இருவரையும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யச் சென்னை மாநகராட்சி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி அப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அச்சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டதன் காரணமாகக் கடுமையான வயிற்று வலி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வரை அடிக்கடி கழிவறைக்குச் சென்று வந்துள்ளார்.

மதிய உணவு இடைவேளை முடிந்து வகுப்பறைக்குள் வந்த ஆசிரியர், அந்தச் சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டதன் காரணமாக அவரிடமிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அவமரியாதை செய்துள்ளார். மேலும், சக மாணவ, மாணவிகளின் முன்னிலையிலேயே அந்தச் சிறுமியை வகுப்பறையை விட்டு வெளியேற்றியுள்ளார். சமூக விழிப்புணர்வு பெருகியுள்ள இந்நாட்களிலும், பள்ளி வளாகத்திற்குள் நிகழ்ந்துள்ள இந்த மூடநம்பிக்கையின் உச்சம் பெற்றோரைக் கொதித்தெழச் செய்துள்ளது:
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பள்ளி முடியும் வரை, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அந்த 11 வயதுச் சிறுமி மாதவிடாய் அசௌகரியத்துடனேயே வகுப்பறைக்கு வெளியே அழுது கொண்டே நிற்க வைக்கப்பட்டுள்ளார். சக நண்பர்களின் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுமி, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு ஓடிச் சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி கதறி அழுதுள்ளார்.
மகளின் நிலையைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவரது தந்தை, உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் ஒன்றை அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதப் பொருளாக மாறியதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டனர். முதற்கட்ட விசாரணையில் ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் உறுதியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகிய இருவரையும் உடனடியாக இடமாற்றம் செய்யக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
