டெல்டா விவசாயிகள் கண்ணீர்... மேட்டூர் அணை திறப்பில் தாமதம் - தஞ்சையில் கருகும் குறுவை பயிர்கள்!
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதால், லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் தவிப்பிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இந்த சாகுபடிப் பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால், வழக்கமான தேதியான ஜூன் 12-ம் தேதி அணை திறப்பது குறித்து தவெக அரசு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.

இதற்கிடையில், அணையை நம்பியிருக்காமல் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் 'முன்பட்ட குறுவை சாகுபடி' செய்துள்ள விவசாயிகள், புதிய பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். பயிர்களைக் காப்பாற்ற மோட்டார்களை இயக்க வேண்டிய சூழலில், கிராமப்புறங்களில் அத்தியாவசிய மும்முனை மின்சாரம் போதிய நேரம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், போர்வெல் மோட்டார்களை இயக்க முடியாமல், பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுப் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
