ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டல் - இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!
சென்னை விருகம்பாக்கம் அருகே ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி மர்ம நபர் செல்போனில் மிரட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமம், மதியழகன் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ரவிச்சந்திரனின் மனைவி ரட்சிதா (27). இவரது செல்போனைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவன், ரட்சிதாவின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகக் கூறி, அதை ரட்சிதாவின் கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த ரட்சிதா, உடனடியாக இச்சம்பவம் குறித்துத் தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறிவிட்டு பணிக்குச் சென்றுள்ளார்.

சம்பவத்தன்று இரவு கணவர் ரவிச்சந்திரன் மீண்டும் செல்போனில் அழைத்த போது ரட்சிதா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் உரிமையாளரை நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரட்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விருகம்பாக்கம் காவல்துறையினர், ரட்சிதாவின் செல்போன் எண்களைக் கொண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
