வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய காதலன் முயற்சி - இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

காதலித்து வந்த நபர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட மன உளைச்சலில், கடலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுகாஷினி (28) என்ற இளம்பெண், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இதற்காகப் புரசைவாக்கத்திலேயே வீடு எடுத்துத் தங்கி வந்துள்ளார்.

நேற்று அவர் நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வேப்பேரி காவல் துறையினர், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுகாஷினி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

சுகாஷினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், அவரது வீட்டில் தீவிரச் சோதனை நடத்தினர். சோதனையின் போது சுகாஷினி எழுதி வைத்திருந்த தற்கொலைக்கடிதம் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது. அதில், தான் தீவிரமாகக் காதலித்து வந்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த விபரீத முடிவை எடுப்பதாகக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இக்கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள வேப்பேரி காவல் துறையினர், சுகாஷினியின் காதலனிடம் விசாரணை நடத்தத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.