திருவாரூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை... திருமண விவகாரத்தில் பெற்றோருடன் கருத்து வேறுபாடு!
திருவாரூர் வடக்கு வீதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவர், திருமணம் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாகத் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் வடக்கு வீதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் குமார் என்பவரது மகள் ஸ்ரீலேகா (24). பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். ஸ்ரீலேகாவுக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பின்னர் சில காரணங்களால் அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க முற்பட்டபோது, ஸ்ரீலேகாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளான அவர், கடையிலிருந்த மண்எண்ணையை ஊற்றித் தீக்குளித்துள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து காப்பாற்ற முயன்ற தந்தை குமாருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
