வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

 
வரதட்சணை  இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (32) என்பவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இவர் தனது கணவர் கந்தசாமியுடன் (36) வசித்து வந்தார். இந்நிலையில், ரஞ்சிதா தனது வீட்டில் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

5வது திருமணம்

கணவர் கந்தசாமி தொடர்ந்து தங்கப் பிரேஸ்லெட் வேண்டும் என வரதட்சணை கேட்டு ரஞ்சிதாவைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கணவரின் தொடர் வரதட்சணை மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக ரஞ்சிதா தீவிர மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரஞ்சிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள், உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வாங்க மறுத்தனர். குற்றவாளியான கணவர் கந்தசாமியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, உடலைக் கைப்பற்ற மறுத்து உறவினர்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.