குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்குப் பின் இளம்பெண் உயிரிழப்பு - சேலத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... உறவினர்கள் போராட்டம்!

 
இளம்பெண் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொக்லைன் ஓட்டுநர் மாதேஸ்வரன் (27). இவரது மனைவி சுமதி (23). இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 42 நாட்களுக்கு முன்பு கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமதிக்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது.

ஒஅ;அ

இதனையடுத்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்த சுமதிக்கு, வாழப்பாடி அருகே உள்ள ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் திடீரென அவரது உடல்நிலை மோசமடையவே, அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தவறான சிகிச்சையின் காரணமாகவே சுமதி உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டிய அவரது குடும்பத்தினரும் உறவினர்களும், அவரது மூன்று குழந்தைகளின் எதிர்கால வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திச் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உரிய இழப்பீடு வழங்கும் வரை உயிரிழந்த சுமதியின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.