பைக் டாக்ஸியில் சென்ற இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - ஓட்டுநருக்கு வலைவீச்சு!
சென்னை எம்கேபி நகர் பகுதியில் பைக் டாக்ஸியில் பயணித்த வடகிழக்கு மாநில இளம் பெண்ணிடம் ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை மாநகரில் பொதுமக்களின் அவசரக் காலப் பயணத் தேவைகளுக்காகப் பைக் டாக்ஸி சேவைகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பைக் டாக்ஸியில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு ஓட்டுநரே பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், சென்னையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

எம்கேபி நகர் காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சென்னை எம்கேபி நகர் பகுதியில் தங்கி, அங்குள்ள ஒரு பிரபல துணிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது பணி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக, மொபைல் செயலி மூலம் பைக் டாக்ஸி ஒன்றை அவர் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். எம்கேபி நகர் அருகே பைக் சென்று கொண்டிருந்த போது, ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் பைக் டாக்ஸி ஓட்டுநர் அந்தப் பெண்ணிடம் வண்டியை நிறுத்திப் பாலியல் ரீதியாக அத்துமீறி அநாகரிகமாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமிட்டதைத் தொடர்ந்து, ஓட்டுநர் அங்கிருந்து பைக்கில் தப்பியோடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட மேகாலயா மாநிலப் பெண், இச்சம்பவம் குறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

சம்பந்தப்பட்ட பைக் டாக்ஸி செயலி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, பெண்ணை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் செல்போன் எண், முகவரி மற்றும் பைக்கின் பதிவு எண் ஆகிய விபரங்களைப் போலீசார் சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில் தப்பியோடிய ஓட்டுநரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சென்னையில் சமீபத்தில் தான் அயனாவரம் பகுதியில் பெண் நுகர்வோர் ஒருவரிடம் அத்துமீறிய சுரேஷ் என்பவரைப் புதிதாகத் தொடங்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' விரைந்து செயல்பட்டுக் கைது செய்தது. அடுத்த சில நாட்களிலேயே பைக் டாக்ஸியில் இந்த விபரீதம் நடந்துள்ளதால், பைக் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்தச் சிறப்பு அதிரடிப்படையினர் சென்னை முழுவதும் உள்ள முக்கியச் சந்திப்புகளில் தங்களது ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
