வகுப்பறைக்குள் நுழைந்து இளம்பெண் ஆசிரியை சுட்டுக்கொலை... முன்னாள் காதலனும் தற்கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆரம்பப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை, தன்னைத் காதலித்துவிட்டு விலகிய ஆத்திரத்தில் முன்னாள் காதலனால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டம் ஹிடயத் நகர் பகுதியில் உள்ள தனியார் ஆரம்பப் பள்ளியில் நிஷாத் பாத்திமா (26) ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த முகமது சாத் (28) என்பவரும் பாத்திமாவும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்துள்ளனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முகமதுடனான காதலைப் பாத்திமா முறித்துக் கொண்டதுடன், அவருடன் பேசுவதையும் முழுமையாக நிறுத்தியுள்ளார்.

காதலை முறித்துக்கொண்ட ஆத்திரத்தில் இருந்த முகமது, நேற்று காலை 11.30 மணியளவில் பாத்திமா வேலை பார்த்துவரும் பள்ளிக்கூடத்திற்கு நேரில் சென்றுள்ளார். மேலும், தன்னிடம் சிறிது நேரம் தனியாகப் பேச வேண்டும் எனக் கேட்டுள்ளார். வகுப்பறையில் இருந்த பாத்திமா அங்கிருந்து வெளியேறி முகமதுவுடன் பள்ளியின் மாடிக்குச் சென்றுள்ளார். மாடிக்குச் சென்றவுடன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த முகமது, பாத்திமாவை சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாத்திமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆசிரியை பாத்திமாவைச் சுட்டுக் கொன்ற பிறகு, அதே துப்பாக்கியால் முகமது சாத்தும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அங்கேயே தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை-தற்கொலை சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
